WC Super 8 – ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இந்தியா அணி
9-வது டி20உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் 8 அணிகள் ‘சூப்பர் 8 ‘ சுற்றுக்கு முன்னேறின.
இந்த நிலையில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி சூப்பர் 8’சுற்றில் தனது முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று பிரிட்ஜ்டவுனில் எதிர்கொண்டது.
அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா , விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர்.
தொடக்கத்தில் ரோகித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பண்ட் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து விராட் கோலி 24 ரன்களுக்கும் , சிவம் துபே 10 ரன்களுக்கும் எடுத்து வெளியேறினர்.
அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் , ஹர்திக் பாண்டியா இருவரும் இணைத்து அதிரடி காட்டினர். இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். இந்த ஜோடியில் சூர்யகுமார் யாதவ் அரைசதமடித்து அசத்தினார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது . இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 53 ரன்களும், ஹர்திக் பாண்டியா 32 ரன்களும் எடுத்தனர்.
ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ரஷித் கான் , பரூக்கி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் குர்பாஸ் மற்றும் ஸசாய் ஆகியோர் களமிறங்கினர்.
இந்த ஜோடியில் குர்பாஸ் 11 ரன்களில் பும்ரா வேகத்தில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய இப்ராகிம் ஷர்டான் 8 ரன்களும், ஸசாய் 2 ரன்னும், நைப் 17 ரன்களும், அதிரடி காட்டி வந்த ஓமர்சாய் 26 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய நஜிபுல்லா ஸர்டான் 19 ரன்கள் எடுத்திருந்தநிலையில் பும்ரா பந்துவீச்சில் கேட்ச் ஆனார். அவரைத்தொடர்ந்து முகமது நபி 14 ரன்களும், ரசித் கான் 2 ரன்னும், நவீன் உல் ஹக் (0) ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து வெளியேறினார்.
கடைசி பந்தில் நூர் அகமது 12 ரன்களில் கேட்ச் ஆனார். இறுதியில் பரூக்கி 4 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, சூப்பர் 8 சுற்றின் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.