உக்ரைன் அமைதிக்கான உச்சநிலை மாநாட்டில் சுவிஸில் கூடியுள்ள உலகத் தலைவர்கள்
உக்ரைன் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவரும்படி ரஷ்யாவுக்கு நெருக்குதல் தரும் நோக்கில் நடைபெறும் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள உலகத் தலைவர்கள் சுவிட்சர்லாந்தில் கூடியுள்ளனர்.
ஜூன் 15, 16ஆம் திகதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில் சீனா கலந்துகொள்ளவில்லை. இது நேரத்தை வீணாக்கும் நிகழ்ச்சி என்று கூறிய ரஷ்யா இதில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டாத நிலையில் சீனாவும் மாநாட்டைப் புறக்கணித்துள்ளது.
சீனா கலந்துகொள்ளாததால், மாஸ்கோவைத் தனிமைப்படுத்தும் முயற்சி கைகூடாது என்றே தோன்றுவதாகக் கவனிப்பாளர்கள் கூறினர்.
ரஷ்யாவின் அண்மைய ராணுவ நடவடிக்கைகள் உக்ரைனுக்கு மிரட்டலாக விளங்கும் நிலையில், மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான போரும் உக்ரைன் மீதான கவனத்தைத் திசை திருப்பியுள்ளது.
மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்கள், ரஷ்யப் போரினால் உணவுப் பாதுகாப்பு, அணுசக்திப் பாதுகாப்பு போன்ற அம்சங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்துக் கலந்துரையாடுவர் என்றும் ரஷ்யாதான் இந்தப் பிரச்சினையைத் தொடங்கியது என்பதை அவர்கள் சுட்டுவர் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
கியவ் நேட்டோவில் சேரும் முயற்சியைக் கைவிட்டு, மாஸ்கோ உரிமைகோரும் நான்கு வட்டாரங்களை முழுமையாக ஒப்படைத்தால் மட்டுமே ரஷ்யா உக்ரைன் மீதான போரை நிறுத்தும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ஜூன் 14ஆம் திகதி கூறியுள்ளார்.போரில் தனது கை ஓங்கியிருப்பதாக மாஸ்கோ கொண்டிருக்கும் நம்பிக்கையை இது காட்டுவதாகக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
சுவிட்சர்லாந்து மாநாட்டில் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ், பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன், கனடா, ஜப்பான் ஆகியவற்றின் தலைவர்களோடு ரஷ்யாவின் நட்பு நாடுகளான இந்தியா, துருக்கி, ஹங்கேரி போன்றவற்றின் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.இதற்கிடையே, ரஷ்யா சிறைபிடித்த உக்ரைனியப் போர்க் கைதிகளையும் குழந்தைகளையும் ஒப்படைக்கக் கோரி உக்ரைனிய ஆதரவாளர்கள் லூசர்ன் நகரில் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது