அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி; பைடன் முறைப்படி வெளியிட்டுள்ள அறிவிப்பு
அமெரிக்க அதிபர் தேர்தல் 2024ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட முடிவு செய்து உள்ளேன் என அதிபர் ஜோ பைடன் முன்பிருந்தே கூறி வந்த நிலையில், அதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டு உள்ளார்.
அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ஒவ்வொரு தலைமுறைக்கும் ஜனநாயகத்திற்கு துணை நிற்க வேண்டிய தருணம் இருக்கும். அவர்கள் தங்களது அடிப்படை சுதந்திரத்திற்காக நிற்க வேண்டி இருக்கும். இது நம்முடையது என நான் நம்புகிறேன் என ட்விட்டரில் பைடன் தெரிவித்து உள்ளார்.
அதனாலேயே, நான் அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் மீண்டும் போட்டியிட இருக்கிறேன். எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள். நாம் வேலையை முடிப்போம் என்று அதில் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க வரலாற்றிலேயே மிக வயது முதிர்ந்த அதிபராக பைடன் இருந்து வருகிறார். அவர், நாம் வேலையை முடிப்போம் என தெரிவித்து, அடுத்த அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தினை தொடங்கி உள்ளார்.
அதேவேளையில், அதிபர் வேட்பாளராக போட்டியிட இருக்கிறேன் என குடியரசு கட்சியின் லார்ரி எல்டரும் அறிவித்து உள்ளார். அவர் சமீபத்தில் ட்விட்டரில், அமெரிக்கா சரிவை நோக்கி செல்கிறது. ஆனால், இந்த சரிவு தவிர்க்க முடியாதது என குறிப்பிட்டார். அமெரிக்க அதிபருக்கான போட்டியில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளார்.
இந்த தேர்தலில் மென்பொருள் தொழில் முனைவோரான விவேக் ராமசுவாமி, முன்னாள் அர்கான்சாஸ் கவர்னர் ஆசா ஹட்சின்சன், முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே உள்ளிட்டோரும் வரிசையில் உள்ளனர் என தி வாஷிங்டன் போஸ்ட் தெரிவிக்கின்றது.