ஜனாதிபதி தேர்தலில் சுயேற்சையாக போட்டியிடும் சிவாஜிலிங்கம்
இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஜனதா கூட்டணிக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை முன்வைப்பதில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அதிக விருப்பம் இல்லை எனத் தோன்றுவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கட்சிகள் பொது வேட்பாளரை முன்வைப்பதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது என தெரிவித்த முன்னாள் எம்.பி, தமிழ் பொது வேட்பாளரை முன்வைத்தால் அந்த வேட்பாளரை ஆதரித்து தமது தீர்மானத்தை வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்தார்.
வடக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளுக்கு பொது வேட்பாளரை முன்னிறுத்துவதற்கான ஆணை இல்லை எனவும், இது தமிழ் மக்களின் பலவீனத்தை வெளிப்படுத்துவதாகவும் அவர் இங்கு தெரிவித்தார்.
சிவாஜிலிங்கம் மேலும் தெரிவிக்கையில், தாம் கடந்த பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டது இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களின் உரிமைகளை வெளிக்காட்டவே என்றார்.