விமான விபத்தில் மலாவியின் துணை ஜனாதிபதி உட்பட 9பேர் உயிரிழப்பு: ஜனாதிபதி சக்வேரா அறிவிப்பு
மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமா உட்பட காணாமல்போன இராணுவ விமானத்தில் இருந்த 9 பேரும் உயிரிழந்துவிட்டதாக ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா தெரிவித்துள்ளார்.
மலாவி நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள மலைப்பகுதியில் மோசமான வானிலை காரணமாக சிறிய ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் துணை அதிபர் சவுலோஸ் சிலிமா மற்றும் 9 பேர் உயிரிழந்தனர்.
51 வயதான சிலிமா, பயணித்த விமானம் தலைநகர் லிலாங்வேயில் இருந்து நேற்று திங்கள்கிழமை காலை 09:17 மணிக்கு (0717 GMT) புறப்பட்டது.
ஆனால், 10:02 மணிக்கு திட்டமிடப்பட்டபடி Mzuzu விமான நிலையத்தில் விமானத்தை தரையிறங்க முடியவில்லை.
இதனால் விமானத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தலைநகருக்குத் திரும்பும்படி உத்தரவிடப்பட்டது. ஆனால், விமானத்தின் தொடர்பு ரேடாரில் இருந்து விலகிச் சென்றதால், விமானப் போக்குவரத்து அதிகாரிகளால் விமானிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா அரசு தொலைக்காட்சியில் ஒரு நேரடி உரையில், வடக்கு நகரமான ம்சூஸுவுக்கு அருகிலுள்ள அடர்ந்த காடுகள் மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்பில் ஒரு நாளுக்கும் மேலாக தேடப்பட்ட பின்னர் விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தார்.
மலை அருகே விமானத்தின் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், விமானம் முற்றிலும் சேதமடைந்ததாகவும், விமானத்தில் இருந்த அனைவரும் மோதியதில் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.
விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக மலாவியின் ஆயுதப்படைகளின் தலைவரால் தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், “இது ஒரு பயங்கரமான சோகமாக மாறியுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் நான் மிகவும் வருத்தப்படுகிறேன்,” என்றும் சக்வேரா கூறியுள்ளார்.
சுமார் 300 போலீஸ் அதிகாரிகள், 200 வீரர்கள் மற்றும் உள்ளூர் வன ரேஞ்சர்கள் உட்பட சுமார் 600 பணியாளர்கள் மிசுஸு அருகே உள்ள விபியா மலைகளில் உள்ள ஒரு பரந்த காட்டுத் தோட்டத்தில் தேடுதலில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானத்தை தேடும் பணி 24 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. தேடுதல் நடவடிக்கையில் அமெரிக்கா, இங்கிலாந்து, நார்வே மற்றும் இஸ்ரேல் ஆகியவை உதவ முன்வந்ததாகவும், “சிறப்பு தொழில்நுட்பங்களை” வழங்கியதாகவும் சக்வேரா கூறினார்.
மலாவியில் அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் முக்கிய வேட்பாளராக போட்டியிடுவார் என கருதப்படும் சிலிமா, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார்.
எவ்வாறாயினும், கடந்த மாதம் அவர் மீதான குற்றச்சாட்டுகளை மலாவி நீதிமன்றம் கைவிட்டுவிட்டது. இந்தப் பின்புலத்திலேயே விபத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.