அமெரிக்காவில் நடந்த தேசிய ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுவன் வெற்றி
அமெரிக்காவில் சொற்களை சரியாகக் கூறும் ‛ஸ்பெல்லிங் பீ’ போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 12 வயது புருஹட் சோமா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள நேஷனல் ஹார்பர் பகுதியில் புகழ்பெற்ற ‛ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ-2024’க்கான இறுதிப்போட்டி நடந்தது.
இந்தப் போட்டியில் புளோரிடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் புருஹட் சோமா வெற்றி பெற்றார்.
தற்போது 7 ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவனுக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர் ரொக்கம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
டை பிரேக்கர் முறையில் நடந்த இந்தப் போட்டியில் புருஹட் சோமா, 90 விநாடிகளில் 29 வார்த்தைகளை சரியாக உச்சரித்து பரிசை தட்டிச் சென்றார்.
இரண்டாவது இடத்தை டெக்சாசில் வசிக்கும் பைஜன் ஜகி என்ற மாணவர் பிடித்தார்.
இந்த ஆண்டு நடந்த போட்டியில் 1.1 கோடி பேர் பங்கேற்றனர். அதில் இருந்து தகுதிச் சுற்றில் 228 பேரும், இறுதிப் போட்டிக்கு 8 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். அதில் இந்திய வம்சாவளிச் சிறுவன் முதலிடத்தை பிடித்தார்.
இதே புருஹத் சோமா, 2022ம் ஆண்டு நடந்த ஸ்பெல்லிங் பீ போட்டியில் 163வது இடத்தையும், 2023ம் ஆண்டு நடந்த போட்டியில் 74வது இடத்தையும் பிடித்து இருந்தார்.
புருஹட் சோமாவின் வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவரது தாயார், அவருக்கு நினைவுத்திறன் அதிகம் என்றும், பகவத் கீதையில் உள்ளவற்றை 80 சதவீதம் நினைவில் வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.