ரத்துபஸ்வல சம்பவம் – வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
கம்பஹா ரத்துபஸ்வல பிரதேசத்தில் சுத்தமான நீருக்காக ஆர்ப்பாட்டத்தின் போது மூவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் மே மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மேல் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட இருந்தது.
கம்பஹா ரத்துபஸ்வல பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் குடிநீர் மாசுபடுவதாகக் கூறி, 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி வெலிவேரிய பகுதியில் சுத்தமான குடிநீரைப் பெற்றுத்தரக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
அங்கு போராட்டக்காரர்களை கலைக்க இராணுவ அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு பள்ளி மாணவர்களும் மற்றொருவரும் உயிரிழந்தனர்.50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அதன் பின்னர் சட்டமா அதிபர், இராணுவ பிரிகேடியர் உட்பட நான்கு இராணுவ வீரர்களுக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் 94 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தாக்கல் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.