புத்தாண்டில் தொழில்சங்க நடவடிக்கையில் குதித்த குடிவரவு அதிகாரிகள்
 
																																		நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் பணிபுரியும் குடிவரவு அதிகாரிகள் 24 மணி நேர தொழில்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி நாளை காலை 9 மணி வரை தமது உறுப்பினர்கள் கறுப்பு பட்டை அணிந்து தொழில்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக இலங்கை குடிவரவு குடியகழ்வு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குடிவரவுத் திணைக்களத்தில் அதிகாரிகள் பற்றாக்குறை, வெற்றிடங்களுக்கு முறையான நியமனங்கள் இல்லாமை, கடமை சேவை ஷிப்ட் முறை மாற்றம் போன்ற பல கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு தமது உறுப்பினர்கள் தொழில்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள போதிலும், விமான நிலையத்திற்கு வரும் மற்றும் புறப்படும் பயணிகளுக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வழமையான செயற்பாடுகளுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படவில்லை என விமான நிலைய அதிகாரி தெரிவித்தார்.
 
        



 
                         
                            
