யூடியூப் ஊடாக ரூ.41 லட்சம் மோசடி! பொலிசார் அதிரடி நடவடிக்கை
யூடியூப் சேனல் மூலம் முதலீடு செய்யக்கோரி சுமார் ஒன்றரை கோடி வரை மோசடியில் ஈடுபட்ட தம்பதி உட்பட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கோவை விளாங்குறிச்சி அக்கம்மாள் கார்டன் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (48). அவரது மனைவி ஹேமா என்கிற ஹேமலதா (38). ஆகிய இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளனர்.
அதில் கோவையில் மலிவு விலையில் வீட்டு உபயோக பொருட்கள் எங்கு கிடைக்கும் என்பதை பதிவு செய்து வந்ததாக தெரிகிறது.
இவர்களது சேனலில் தென்காசியை சேர்ந்த அருணாச்சலம் (34) என்பவரும் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் தம்பதியினர் தங்களது யூடியூப் சேனலில் ரூ.1,200 முதலீடு செய்தால், 20 நாட்களில் மூலதன தொகையுடன் ரூ.300 சேர்த்து ரூ.1,500 ஆக திருப்பி தரப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பை நம்பிய பலர் இவர்கள் கூறிய வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி உள்ளனர். இந்த நிலையில் தம்பதியினர் அறிவித்தப்படி முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.
இதனிடையே தம்பதியினர் தங்களது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் இந்த சேனலில் முதலீடு செய்த கோவை பன்னிமடை பாரதி நகரை சேர்ந்த ரமா(30) கோவை மாநகர குற்றப்பிரிவு பொலிசில் முறைப்பாடு அளித்துள்ளார்.
முறைப்பாடு பேரில் ஆய்வாளர் ரேணுகா தேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை முன்னெடுத்துள்ளார்.
விசாரணையில் தம்பதியினர் 44 பேரிடம் ரூ.41 லட்சத்து 88 ஆயிரம் மோசடி செய்தது விசாரணையில் தகவலாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கோவை விளாங்குறிச்சி பகுதியில் பதுங்கி இருந்த ரமேஷ், அவரது மனைவி ஹேமலதா மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அருணாச்சலம் (வீடியோகிராபர்) ஆகிய மூவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட தம்பதியினர் இருவரும் ரூ.1.5 கோடி வரை மோசடி செய்து இருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்,
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 45 பவுன் தங்க நகைகள், 1.5 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.10,250 ரொக்கம், ஸ்கூட்டர், டிஜிட்டல் கேமரா, 7 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் குற்றப்பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளனர்.