வான் பாயும் 36 பிரதான குளங்கள்: நில்வலா ஆற்றின் நீர்மட்டமும் உயர்வு
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள 36 பிரதான குளங்கள் உட்பட மொத்தம் 88 நீர்த்தேக்கங்கள் தற்போது வான் பாய்ந்து வருகின்றன.
இது குறித்து கருத்து வெளியிட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் சூரியபண்டார, நீர் வெளியேற்றத்தால் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்பில்லை என்பதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையில், கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி நில்வலா நதியை அண்டிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த நதிப் படுக்கையை அண்டிய பகுதிகளில் ஆங்காங்கே 50-100 மில்லி மீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இந்த நிலைமையின் அடிப்படையில் நில்வலா நதியின் நீர் மட்டம் சிறிய அதிகரிப்பைக் காட்டினாலும், பதிவான மழை வீழ்ச்சியின் அடிப்படையில் அது வெள்ள நிலைமை ஏற்படும் அபாயம் வரை செல்லவில்லை என்றும் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார குறிப்பிட்டார்.





