பேங்காக்கில் உள்ள பிரபல சந்தையில் தீ விபத்து – 1,000 விலங்குகள் பலி!
தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள பிரபல சாட்டுச்சாக் சந்தையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) காலை மூண்ட தீயில் சுமார் 1,000 விலங்குகள் கொல்லப்பட்டன.
செல்லப் பிராணிகள் பகுதியில் இருந்த பறவைகள், நாய்கள், பூனைகள், பாம்புகள் உள்ளிட்ட விலங்குகள் எரிந்து மாண்டன. தீயால் கிட்டத்தட்ட 100 கடைகள் பெரும் சேதத்துக்கு உள்ளாயின.
மின்சாரப் பிரச்சினையால் தீ மூண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மனிதர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
குறுகிய இடங்களில் பல்லாயிரக்கணக்கான கடைகளை உள்ளடக்கிய சாட்டுச்சாக், தென்கிழக்காசியாவின் ஆகப் பெரிய சந்தைகளில் ஒன்றாகும். தாய்லாந்தின் ஆகப் பெரிய, ஆகப் பிரபலமான வாரயிறுதிச் சந்தைகளில் ஒன்றாகவும் அது விளங்குகிறது.
ஒவ்வொரு வாரயிறுதியிலும் சாட்டுச்சாக் ஏறத்தாழ 200,000 சுற்றுப்பயணிகளை ஈர்த்து வருகிறது.