வட இந்தியாவில் ராணுவ நிலையத்திற்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்
இந்தியாவின் வடக்கு மாநிலமான பஞ்சாபில் புதன்கிழமை காலை ராணுவ நிலையத்திற்குள் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்தியவர் மற்றும் கொல்லப்பட்டவர்களின் அடையாளங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
பஞ்சாபில் உள்ள பதிண்டா ராணுவ நிலையத்திற்குள் உள்ளூர் நேரப்படி அதிகாலை 04:35 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் நடத்தியவர் இராணுவ சீருடை அணிந்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலையத்தின் விரைவு எதிர்வினை குழுக்கள் செயல்படுத்தப்பட்டு அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதாக ராணுவ அறிக்கையை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தாக்குதல் நடத்தியவரைப் பிடிக்க இன்னும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால், ராணுவ நிலையத்திற்குள் இருக்கும் அனைவரையும் முகாமுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், இந்த சம்பவத்தில் பயங்கரவாத கோணம் எதுவும் இல்லை என்று உள்ளூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் இரண்டு நாட்களுக்கு முன்பு, 28 தோட்டாக்களுடன் கூடிய இன்சாஸ் ரைபிள் ஒன்று காணாமல் போனதாகவும், அதனைக்கொண்டு இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.