பாக்கிஸ்தானில் 20,000 ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியானது
பாகிஸ்தானின் வருடாந்த பணவீக்க விகிதம் மார்ச் மாதத்தில் 35.37 சதவீதத்தை எட்டியுள்ளது, ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக இல்லாத அளவுக்கு பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளதாக அரசாங்க தரவுகளை மேற்கோள்காட்டி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சனிக்கிழமை வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, மாதப் பணவீக்கம் 3.72 சதவீதமாக இருந்தது, அதே சமயம் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் சராசரியாக 27.26 சதவீதமாக இருந்தது.
கோதுமை மா, சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கணிசமாக அதிகரித்து வருவதால் நாடு அதிக அளவு பணவீக்கத்தை சந்தித்து வருகிறது.
இஸ்லாமியர்களின் நோன்பு மாதமான ரமலான் தொடங்கியதில் இருந்து உணவு விநியோக மையங்களில் கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கிட்டத்தட்ட 20,000 தொழிலாளர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது.
அங்குள்ள சுமார் 30 தொலைபேசி அசெம்பிளி யூனிட்கள் மூடும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி கட்டுப்பாடுகளால் மூலப்பொருட்கள் தீர்ந்துவிட்டதாக உற்பத்தியாளர்கள் கூறுவதால் அசெம்பிளி யூனிட்கள் மூடப்பட்டன.
தொழிலாளர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளத்தில் பாதியை முன்கூட்டியே செலுத்திய பிறகு, பெரும்பாலான வணிகங்கள் அவர்களை நிறுத்தி வைத்துள்ளன. மீண்டும் உற்பத்தி தொடங்கியவுடன் தொடர்பு கொள்ளப்படும் என ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் உற்பத்தியாளர்கள் தொழில்துறை முழு திறனுடன் இயங்க, ஒவ்வொரு மாதமும் 170 மில்லியன் டொலர் மதிப்புள்ள பாகங்கள் மற்றும் கூறுகளை இறக்குமதி செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.
ஆனால், டொலர் தட்டுப்பாடு காரணமாக, கடன் கடிதங்களை திறக்க அரசு அனுமதிப்பதில்லை. அதிக பணவீக்க விகிதம் பாகிஸ்தானின் மக்கள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது, குறிப்பாக குறைந்த மற்றும் நிலையான வருமானம் உள்ளவர்கள்.
அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைவாசி உயர்வால் அவர்கள் அன்றாடம் வாழ்க்கையை நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசாங்கம் வட்டி விகிதங்களை அதிகரிப்பது மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீதான இறக்குமதி வரிகளைக் குறைப்பது போன்ற பல நடவடிக்கைகளை எடுத்தது.
இருப்பினும், இந்த நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்ட தாக்கத்தையே கொண்டிருந்தன, மேலும் பணவீக்கம் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது.
அதிகரித்துவரும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பில் சரிவு போன்ற காரணங்களால் நாடு சவால்களைச் சந்தித்து வருகிறது.
இந்த சவால்களை எதிர்கொள்ள சர்வதேச அமைப்புகளின் உதவியை நாடுவது போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்திருந்தது.