ஈரான், சவுதி அரேபியா உயர்மட்ட பயணங்களை உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஈரானும் சவுதி அரேபியாவும் இருதரப்பு உறவுகளை முழுமையாக மீட்டெடுப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகவும், ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தங்களுக்கு இணங்கவும் உயர்மட்டங்கள் உட்பட பரஸ்பர பயணங்களை பரிமாறிக்கொள்ளும் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி சவூதி அரேபியாவிற்கு மேற்கொள்ளவிருக்கும் விஜயம் தொடர்பான மேலதிக விபரங்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே நாசர் கனானி வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ் அல் சௌத்திடம் இருந்து ரைசியின் வருகைக்கான அழைப்பிதழ் வந்துள்ளதாக கனானி தெரிவித்துள்ளார்.
அதற்கு ஈரானிய ஜனாதிபதி சவுதி மன்னரை தெஹ்ரானுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் ஒருவரையொருவர் வருகைக்கு அழைத்துள்ளனர் என்றும் கனானி மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அத்தகைய பரிமாற்ற விஜயங்கள் தேவையான திட்டமிடல் மற்றும் தேவையான நிறைவேற்று நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்திய பின்னரே மேற்கொள்ளப்படும் என்று பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.