சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி
16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
இந்தப் போட்டி சென்னை அணியின் கேப்டனாக தோனிக்கு 200வது போட்டியாகும். டாஸ் வென்ற சி.எஸ்.கே. முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 10 ரன்னில் அவுட்டானார். ஜாஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்த படிக்கல் அதிரடியாக ஆடினார். இதனால் ரன் வேகம் அதிகரித்தது. 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 77 ரன்கள் சேர்த்த நிலையில், படிக்கல் 38 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்த பந்தில் சஞ்சு சாம்சன் டக் அவுட்டானார். ஜடேஜா இரு விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பட்லர் அரை சதமடித்தார்.
அவர் 52 ரன்னில் அவுட்டானார். அஸ்வின் 30 ரன்னில் வெளியேறினார். இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்துள்ளது.
ஹெட்மயர் 30 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா, ஆகாஷ் சிங், தேஷ் பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டும், மொயீன் அலி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. போட்டியின் இறுதியில் திவன் கன்வே அரை சதம் எடுத்தார்.
எம்.எஸ்.தோனி 32 ரன்களும், தொடர்ந்து ரகானே31 ரன்களும், ஷிவம் துபே மற்றும் ருத்துராஜ் தலா 8 ரன்களும், அலி 7 ரன்களும், ஜடேஜா 25 ரன்களும், ராயுடு ஒரு ரன்னும் எடுத்தனர்.
இறுதியில் சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.