பாகிஸ்தானை உலுக்கிய பூகம்பத்தினால் 9 பேர் பலி: வட இந்தியாவிலும் உணரப்பட்ட நில அதிர்வு!
பாகிஸ்தானின் சில பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை 6.5 ரிக்டர் அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் சில பகுதிகளில் கடந்த செவ்வாயன்று 6.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.மேலும் 160க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் நிலநடுக்கத்தின் மையம் உருவாகியுள்ளது, அதன் ஆழம் 180 கிலோமீட்டர் என்று பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, குவெட்டா, பெஷாவர், கோஹாட், லக்கி மார்வாட் மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குஜ்ரன்வாலா, குஜராத், சியால்கோட், கோட் மோமின், மத் ரஞ்சா, சக்வால், கோஹாட் மற்றும் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதிகளிலும் வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நில நடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் தெருக்களை நோக்கி ஓடுவதைப் போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி பாகிஸ்தான் நாட்டு மக்களிடையே பதட்டத்தை உண்டாக்கியுள்ளன. நில நடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் அரசு நடத்தும் அசோசியேட் பிரஸ் படி, எந்தவொரு சூழ்நிலையையும் கையாள விழிப்புடன் இருக்குமாறு பேரிடர் மேலாண்மை அதிகாரிகளைப் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கேட்டுக் கொண்டுள்ளார்.மத்திய சுகாதார அமைச்சர் அப்துல்காதர் படேலின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய தலைநகர் மருத்துவமனைகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச நில அதிர்வு மையத்தின்படி, பாகிஸ்தானைத் தவிர, இந்தியா, ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்படுவது அடிக்கடி நிகழ்கிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் இஸ்லாமாபாத்தில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.