ஐ.எம்.எஃப் இலங்கைக்கு சாதகமான முடிவை தருமா : அதீத நம்பிக்கையில் இலங்கை!
சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று சபை இலங்கைக்கு சாதகமான தீர்மானத்தினை எடுக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அதீத நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று சபையானது நாளை திங்கட்கிழமை கூடவுள்ள நிலையில் இலங்கைக்கு 2.9பில்லியன் டொலர்கள் வழங்குவது தொடர்பில் தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நாம், சர்வதேச நாணயநிதியத்துடன் பலசுற்றுப் பேச்சுக்களை நடத்தியுள்ளோம். அதில் பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டிருக்கின்றோம்.
குறிப்பாக, இந்தியா, யப்பான், சீனா உள்ளிட்ட பாரிய கடன்வழங்குநர்கள் கடன்மறுசீரமைப்பு உறுதிப்பாட்டுக் கடிதத்தினை வழங்கியுள்ளார்கள்.
அவ்விதமான செயற்பாடுகளின் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப் பெற்றுக்கொள்வதற்கான அனைத்து செயற்பாடுகளையும் முறையாக பூர்த்தி செய்துள்ளோம்.
அந்த அடிப்படையில் நிறைவேற்றுக்குழுவானது இலங்கையின் விடயங்களை ஆராய்ந்து சாதகமான தீர்மானத்தினை எடுக்கும் என்று நம்பிக்கை உள்ளது என்றார்.