ஒன்பது வளைவுகள் பாலம் உலக பாரம்பரியமாக மாறுமா?
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் முக்கிய இடமாக மாறியுள்ள ஒன்பது வளைவுகள் பாலத்தை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி ரணசிங்க, அவ்வாறானதொரு பிரேரணை இருப்பதாகவும், அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
யுனெஸ்கோவின் தலையீட்டின் ஊடாக 09 வளைவுகள் கொண்ட பாலத்தை உலக பாரம்பரிய சின்னமாக மாற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அதனைச் சுற்றியுள்ள நிலங்கள் தேயிலை பயிர்ச்செய்கையில் மிகவும் தன்னிறைவு பெற்றமையே இதற்குக் காரணம் எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேயிலை பயிர்ச்செய்கைக்கு இலங்கை சர்வதேச ரீதியில் புகழ்பெற்று விளங்குவதால் அதனை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த புதிய பிரேரணை அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
09 வளைவு பாலம் 1921 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டது.
20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் நாட்டின் பொறியியல் மற்றும் கட்டிடக்கலை தொழில்நுட்பத்தை பிரதிபலிக்கும் வகையில் எல்ல மற்றும் தெமோதர ரயில் நிலையங்களுக்கு இடையில் இது கட்டப்பட்டுள்ளது.
பதுளை-கொழும்பு புகையிரதப் பாதை நிர்மாணிக்கப்பட்ட போது, இரண்டு மலைகளை இணைக்கும் ‘வானப் பாலம்’ என்றும் அழைக்கப்பட்டது.
இந்த பாலம் 300 அடி நீளமும், 25 அடி அகலமும், 80-100 அடி உயரமும் கொண்டது.