137 பில்லியன் யூரோவிற்காக காத்திருக்கும் உக்ரைன் – ஒன்றுக்கூடும் ஐரோப்பிய தலைவர்கள்!
ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இன்று ஒன்றுக்கூடவுள்ளனர்.
இதன்போது உக்ரைனுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேவைப்படும் இராணுவ உபகரணங்கள் மற்றும் பிற நிதித் தேவைகளை பூர்த்தி செய்ய முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிசீலனை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் இடம்பெயர்வு, கூட்டமைப்பின் விரிவாக்கக் கொள்கை, வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் குறித்தும் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைனுக்கு தற்போது 137 பில்லியன் யூரோ தேவை எனக் கூறப்படுகிறது. இதனை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய்வதே இதன் முதன்மையான நோக்கம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen), “உக்ரைனின் போராட்டத்திற்கு எவ்வாறு நிதியளிப்பது என்பதைத் தேர்ந்தெடுப்பது நம் கையில்தான் உள்ளது. அவசரம் எங்களுக்குத் தெரியும். அது கடுமையானது. நாம் அனைவரும் அதை உணர்கிறோம். நாம் அனைவரும் அதைப் பார்க்கிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே உக்ரைனுக்கு தேவையான நிதியை, ஐரோப்பாவில் முடக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் திரட்டலாம் என பல ஐரோப்பிய தலைவர்கள் முன்மொழிந்துள்ளனர்.
இருப்பினும் குறித்த திட்டம் தொடர்பில் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





