24 மணி நேரத்தில் 118 உக்ரேனிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் குண்டுவீசி தாக்குதல்
ரஷ்யா 24 மணி நேரத்தில் 118 உக்ரேனிய நகரங்கள் மற்றும் கிராமங்களை குண்டுவீசித் தாக்கியுள்ளது.
இந்த ஆண்டு வேறு எந்த நாளையும் விட இது அதிகம் என்று உக்ரேனிய உள்துறை அமைச்சர் இஹோர் க்ளைமென்கோ தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் 27 பிராந்தியங்களில் 10 பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வடகிழக்கு கார்கிவ் பகுதியில் ஒரே இரவில் நடந்த ஷெல் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், தெற்கு கெர்சன் பகுதியில் மற்றொருவர் கொல்லப்பட்டதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பகலில், தெற்கு நகரமான நிகோபோல் மீது ரஷ்ய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 59 வயது பெண் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மேலும் நான்கு பேர் காயமடைந்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
புலனாய்வுத் தகவலை மேற்கோள் காட்டி, தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் புதன்கிழமை, வட கொரியா ரஷ்யாவிற்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பீரங்கி குண்டுகளை வழங்கியுள்ளது என்று கூறினார்.
இதற்கிடையில், மேற்கத்திய நாடுகள் ரஷ்ய தாக்குதல்களுக்கு எதிராக தற்காத்துக் கொள்ள உதவுவதற்காக கியேவுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை இராணுவ உதவி வழங்கியுள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. .