டிக்டாக் (TikTok )அமெரிக்கத் தடைக்கு முற்றுப்புள்ளி: புதிய கூட்டு நிறுவனம் உதயம்!
அமெரிக்காவில் டிக்டாக்கைத் தொடர்ந்து இயக்குவதற்காக, அமெரிக்க மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுடன் இணைவதற்கான. ஒப்பந்தங்களில் (Binding Agreements) கையெழுத்திட்டுள்ளதாக டிக்டாக் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஷௌ ஜி செவ் (Shou Zi Chew) வியாழக்கிழமை (டிசம்பர் 18, 2025) தனது ஊழியர்களுக்குத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் டிக்டாக்கின் செயல்பாடுகளைக் கவனிக்க “TikTok USDS Joint Venture LLC” என்ற புதிய கூட்டு நிறுவனம் உருவாக்கப்படும் என்றும் இதன் பங்குதாரர்கள் யார் யார் என்று அறிவித்துள்ளனர்.
ஆரக்கிள் (Oracle), சில்வர் லேக் (Silver Lake) மற்றும் அபுதாபியைச் சேர்ந்த MGX ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த புதிய நிறுவனத்தில் 50% பங்குகளை வைத்திருக்கின்றனர்.
மீதமுள்ள பங்குகளில், தற்போது பைட் டான்ஸில் முதலீடு செய்துள்ள பிற நிறுவனங்களுக்கு 30.1% பங்குகளும், பைட் டான்ஸ் (ByteDance) நிறுவனத்திற்கு 19.9% பங்குகளும் இருக்கின்றன.
அமெரிக்கச் சட்டப்படி, ஒரு சீன நிறுவனம் 20 சதவீதத்திற்கு மேல் பங்குகளை வைத்திருக்கக் கூடாது என்பதால், பைட் டான்ஸ் தனது பங்குகளை 19.9%-ஆகக் குறைத்துள்ளது. மேலும், இந்த புதிய நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் பெரும்பாலானோர் அமெரிக்கர்களாக இருப்பார்கள்.
மேலும் அமெரிக்கப் பயன்பட்டாளர்களின் தரவுகள் அனைத்தும் அமெரிக்காவிலேயே ஆரக்கிள் (Oracle) நிறுவனத்தின் மேகக்கணி (Cloud) உள்கட்டமைப்பில் சேமிக்கப்படும்.
டிக்டாக்கின் சக்திவாய்ந்த ‘அல்காரிதம்’ (வீடியோக்களைப் பரிந்துரைக்கும் தொழில்நுட்பம்), அமெரிக்கத் தரவுகளைக் கொண்டு மறுபயிற்சி (Retrain) செய்யப்படும். இதன் மூலம் வெளிப்புறத் தலையீடுகள் இன்றி சுதந்திரமாகச் செயல்படுவது உறுதி செய்யப்படும்.
இந்த ஒப்பந்தம் வரும் 2026 ஜனவரி 22-ஆம் தேதி முழுமையாக நிறைவடையும் (Closing Date) என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 17 கோடிக்கும் அதிகமான அமெரிக்கப் பயனர்கள் டிக்டாக்கைத் தடையின்றித் தொடர்ந்து பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த ஒப்பந்தத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





