இலங்கையில் ஒரு முட்டை 70 ரூபாய்? இறைச்சிக்கு தட்டுப்பாடு?
எதிர்வரும் பண்டிகை காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அன்டன் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஏற்பட்ட பேரழிவினால் சுமார் 28 இலட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளன. இதனால் வரும் நாட்களில் முட்டை ஒன்றின் விலை 70 ரூபாவாக உயர்வடையும் எனவும் குறிப்பிட்டார்.
கடந்த சில நாட்களாக நிலவிய மோசமான வானிலையால் முழு நாடும் இயற்கை பேரிடருக்கு முகங்கொடுத்துள்ளதுடன் பெரும் வெள்ளம் காரணமாக பண்ணையில் வளர்க்கப்பட்ட சுமார் 28 இலட்சத்துக்கும் அதிக எண்ணிக்கையிலான கோழிகள் உயிரிழந்துள்ளன.
இதனால் கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏனைய கால் நடை உற்பத்திகளும் இதனால் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. கோழி இறைச்சியின் விலை தற்போது குறைவாக இருப்பினும், எதிர்வரும் பண்டிகை காலத்தின் போது கோழிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.
அத்தோடு இக்காலப்பகுதியில் கோழி இறைச்சியை உணவுக்குப் பயன்படுத்த வேண்டாம் என்ற வதந்திகளும் பரவி வருவதைக் காண முடிகிறது. எவ்வாறாயினும் நாம் வெள்ளத்தால் உயிரிழந்த கோழிகளை மனித நுகர்வுக்கு ஒருபோதும் பயன்படுத்துவதில்லை.
அத்தோடு பண்ணை விலங்கு, கால்நடை உற்பத்திக்கு சவாலாக, கால்நடை தீவனத்திற்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளது. ஆகையால் கால்நடை உற்பத்தியாளர்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிப்பதற்கும், சந்தையை நிலைப்படுத்தவும் அரசாங்கம் கால்நடை தீவன மூலப்பொருட்களை உடனடியாக இறக்குமதி செய்வது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.





