இந்தியா வந்தடைந்த தலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி

சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளிலிருந்து தற்காலிக விலக்கு அளிக்கப்பட்ட தலிபான் அரசாங்கத்தின் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி இந்தியா வந்தடைந்துள்ளார்.
ஆகஸ்ட் 2021ல் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், காபூலில் இருந்து புது தில்லிக்கு உயர்மட்ட அதிகாரிகள் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
இந்தியாவிற்கு ஆறு நாள் பயணமாக வந்துள்ள முத்தாகி, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
இது குறித்து பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் “முத்தாகி உடன் இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து அவருடன் கலந்துரையாட நாங்கள் ஆவலாக உள்ளோம்’ என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக, கடந்த மாதம் அமைச்சர் முத்தாகி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் விதித்த தடை காரணமாக அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டது.