புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்தை கண்டுப்பிடித்த இலங்கை ஆய்வாளர்கள்!
புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்தைக் கண்டுபிடிப்பதில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் வெற்றிப்பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
மனித உடலின் ஒரு பகுதியில் அசாதாரண செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மரணத்தை ஏற்படுத்தும்.
உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 10 மில்லியன் மக்கள் புற்றுநோயால் இறக்கின்றனர். இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் 15,000 முதல் 20,000 பேர் உயிரிழக்கின்றனர்.
இந்த சூழலில், 2008 ம் ஆண்டு முதல் முதல் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த ஊட்டச்சத்து மருந்து, 05 மருத்துவ தாவரங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வெர்னோனியா ஜெய்லானிகா, நிஜெல்லா சாடிவா, ஹெமிடெஸ்மஸ் இண்டிகஸ், லூகாஸ் ஜெய்லானிகா மற்றும் ஸ்மைலாக்ஸ் கிளாப்ரா ஆகிய தாவரங்களிலிருந்து பெறப்பட்ட மருந்துகளின் கலவையானது புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக ரஷ்யா புற்றுநோய் தடுப்பூசியை வெற்றிகரமாக கண்டுப்பிடித்ததாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





