நெருக்கடிக்குப் பின் மீண்டு வரும் இலங்கையின் பொருளாதாரம் – IMF வெளியிட்ட தகவல்
இலங்கையின் விரிவான பொருளாதார சீர்திருத்தத் திட்டம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. நெருக்கடிக்குப் பின்னராக வலுவான மீட்சியையும் மேம்பட்ட நிதி ஆரோக்கியத்தைக் குறிக்கிறது என்றும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் ஐந்தாவது மதிப்பாய்வை, சர்வதேச நாணய நிதியக் குழு தற்போது நடத்தி வருகிறது.
முன்னதாக, 2025 ஜூலை முதலாம் திகதியன்று சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, தமது நான்காவது மதிப்பாய்வை முடித்தது. இந்த நிலையில், இலங்கைக்கு 350 மில்லியன் டொலர் கிடைத்தன.
இதன் அடிப்படையில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம், நிதி உதவியாக 1.74 பில்லியன் டொலரை வழங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியக்கணிப்பின்படி, இலங்கைக்கான பொருளாதாரம் நம்பிக்கைக்குரியதாக மாற்றமடைந்துள்ளது.
பணவீக்கமும் தணிந்துள்ளது, அத்துடன் அரச வருமானமும் கணிசமாக மேம்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜூலி கோசாக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், இலங்கையின் முன்னேற்றம் பாராட்டத்தக்கது என்றாலும், நிதி மற்றும் வெளிப்புற இடையகங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்தங்களுக்கு இலங்கையின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு அவசியம் என்று நிதியத்தின் தகவல் தொடர்பு பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.





