ஏமன் கடலில் மூழ்கிய சிறிய படகு – 49 குடியேற்றவாசிகள் பரிதாபமாக மரணம்
200 மேற்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற சிறிய படகு ஏமன் கடலில் மூழ்கியதில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தில் 140 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல்களின்படி, இறந்தவர்களில் 6 குழந்தைகள் மற்றும் 31 பெண்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. விபத்து நடந்தபோது படகில் 260 பேர் இருந்தனர்.
அவர்கள் எத்தியோப்பியா மற்றும் சோமாலியாவைச் சேர்ந்த இன மற்றும் உள்நாட்டுப் போர் மோதல்களில் இருந்து தப்பியவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இக்குழுவினர் 320 கிலோமீற்றர் தூரம் பாதயாத்திரையாக வந்து ஏடன் வளைகுடா ஊடாக படகு மூலம் ஏமன் செல்ல முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஏமனில் இருந்து சவூதி அரேபியா மற்றும் பிற பிராந்திய அரபு நாடுகளுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குழுவொன்று நுழைய முயற்சித்துள்ளது.
படகு கடலில் மூழ்கியதையடுத்து கடலில் மிதந்த 71 பேரை கடலோர காவல்படையினர் காப்பாற்றியதாகவும் அவர்களில் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.