ஐரோப்பா மீது தாக்குதல் நடத்தும் திட்டம் எதுவுமில்லை: மேற்கத்திய நாடுகளின் எச்சரிக்கையை மறுத்தார் புடின்
ரஷ்யாவை மற்ற நாடுகள் மரியாதையுடன் நடத்தினால், உக்ரைன் போருக்குப் பிறகு வேறு எந்தப் போரும் ஏற்படாது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோவில் நடைபெற்ற நான்கு மணிநேர ‘டைரக்ட் லைன்’ (Direct Line) நேரடி நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ஐரோப்பிய நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவது வெறும் “முட்டாள்தனமானது” என வர்ணித்தார்.
உக்ரைன் போரை அமைதி முறையில் முடிவுக்குக் கொண்டு வரத் தான் தயாராக இருப்பதாகவும், ஆனால் நேட்டோ (NATO) விரிவடையக் கூடாது என்ற ரஷ்யாவின் அடிப்படை நிபந்தனைகளில் சமரசம் கிடையாது என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அமைதி முயற்சிகளைப் பாராட்டிய புடின், தீர்வு காண்பதற்கான பந்து இப்போது மேற்கத்திய நாடுகளின் கைகளிலேயே உள்ளதாகக் குறிப்பிட்டார்.





