பாகிஸ்தானிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்திக்கவுள்ள அதிபர் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பாகிஸ்தானியப் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்பை வியாழக்கிழமை (செப்டம்பர் 25) சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப் பேச்சுவார்த்தை வெள்ளை மாளிகையில் நடைபெற வாய்ப்புள்ளதாக என்று டிரம்ப் நிர்வாக அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் ஊடகத்திடம் தெரிவித்தார். இரு நாடுகளும் வர்த்தக உடன்பாட்டுக்கு இணங்கிய பிறகு இச்சந்திப்பு இடம்பெறுகிறது.
அண்மைய காலங்களில் அமெரிக்க-பாகிஸ்தான் இடையே உறவு மேம்பட்டுள்ளது.
ஜூலை 31ஆம் திகதி அமெரிக்காவும் பாகிஸ்தானும் வர்த்தக உடன்பாட்டைச் செய்துகொண்டதாக அறிவித்தன. அதன்படி அமெரிக்கா, பாகிஸ்தானியப் பொருள்களுக்கு 19% வரியை விதித்தது.
ஐக்கிய நாட்டு நிறுவனப் பொதுச் சபைக் கூட்டத்துக்கு இடையே முஸ்லிம் நாடுகளின் தலைவர்களோடு டிரம்ப் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) பேச்சு நடத்தினார். அதில் ஷெரிப்பும் கலந்துகொண்டார்.





