இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு ஜனாதிபதி ரணில் வழங்கிய வாக்குறுதி
இந்த வருடம் வங்குரோத்து நிலையில் இருந்து நாடு விடுவிக்கப்பட்டதன் பின்னர் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தூரப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற யாழ் மாவட்ட இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதனுடன், ஏற்றுமதி பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நவீன விவசாயத்தை கிராமத்திற்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
யாழ்ப்பாண பிரதேச இளைஞர்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை நேரடியாக ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கும் சந்தர்ப்பமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர்/ பணிப்பாளர் நாயகம் பசிந்து குணரத்னவும் கலந்துகொண்டார்.
பின்னர், உள்ளூர் இளைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் கலாசார நிகழ்ச்சிகளை பார்வையிட ஜனாதிபதியும் இணைந்துகொண்டார்.