பிரான்ஸ் முழுவதும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய மக்கள்!
பிரான்ஸ் முழுவதிலும் உள்ள 200 இற்கும் மேற்பட்ட நகரங்களில் நேற்று (02.10) போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உதவிக் குறைப்புகளைக் கண்டித்தும், பணக்காரர்கள் மீது அதிக வரிகள் விதிக்கக் கோரியும் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், தொழிலாளர்கள், ஓய்வு பெற்றவர்கள் பங்கேற்றிருந்தனர். பிளேஸ் டி’இத்தாலியில் இருந்து பேரணிகள் ஆரம்பமாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்ஸில் எழுந்துள்ள அரசியல் குழப்பங்கள், மற்றும் வரவு செலவு மீது மக்கள் கொண்டுள்ள விரக்தியின் அடிப்படையில் இவ்வாறான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னுவிடம் அவர் முன்மொழிந்துள்ள வரவு செலவு திட்டத்தை கைவிடுமாறு தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
ஏறக்குறைய 85,000 போராட்டக்காரர்கள் வீதியில் இறங்கியதாக பிரெஞ்சு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





