2025 ஐபிஎல் தொடரில் நியூசிலாந்து வீரர்கள் பங்கேற்பது சந்தேகம்!
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2025ம் ஆண்டு மார்ச், ஏப்ரர் மாதங்களில் பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடரில் விளையாட உள்ளது.
இதன் காரணமாக நியூசிலாந்து வீரர்கள் ஐபிஎல் 2025ல் விளையாட முடியாமல் போக அதிக வாய்ப்புள்ளது. சமீபத்தில் வெளியான அட்டவணையின்படி நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2025ல் ஆறு ஒருநாள் போட்டிகள் மற்றும் 8 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
பிப்ரவரி மாதம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடைபெற நிலையில், மார்ச் மாதம் ஐபிஎல் போட்டிகள் துவங்கும். அந்த சமயத்தில் பாகிஸ்தான் அணியுடன் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்த ஆண்டும் ஐபிஎல் நடைபெற்று கொண்டிருந்த போது பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே போட்டிகள் நடைபெற்றது.
அப்போது நியூசிலாந்து அணியில் உள்ள முக்கியமான வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி கொண்டிருந்ததால் இரண்டாம் கட்ட அணியை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுப்பியது.
இதே போன்று அடுத்த ஆண்டும் நடக்குமா? அல்லது ஐபிஎல்லில் விளையாடாமல் நியூஸிலாந்து வீரர்கள் பாகிஸ்தான் தொடரில் பங்கேற்பார்களா என்பது பற்றி தெரியவில்லை. இந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி அரை இறுதிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.
அணி வீரர்கள் நாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் லீக் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்ற குற்றசாட்டு எழுந்தது. எனவே அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் நியூசிலாந்து வீரர்கள் விளையாடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே டெஸ்ட் தொடர் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. அக்டோபர் 16 ஆம் தேதி முதல் நவம்பர் 5ம் தேதி வரை மொத்தம் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட இந்தியாவிற்கு வருகிறது நியூசிலாந்து அணி. அதனை தொடர்ந்து நவம்பர் 28 ஆம் தேதி முதல் இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதியில் இலங்கைக்கு எதிராக மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 தொடரிலும் நியூசிலாந்து அணி விளையாடுகிறது.