மொராக்கோ அரசாங்க எதிர்ப்பு போராட்டம் – மூவர் உயிரிழப்பு
மொராக்கோவில் ஊழல் மற்றும் பொதுச் செலவினங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு எதிரான போராட்டங்களின் போது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு நகரமான அகாடிருக்கு வெளியே உள்ள ஒரு சிறிய நகரமான லெக்லியாவில் பாதுகாப்புப் படையினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர், இதனால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
காவல்துறையின் ஆயுதங்களைக் கைப்பற்றும் முயற்சியின் போது மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக மொராக்கோவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த போராட்டத்தின் போது நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர், 1,000ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக மொராக்கோ மனித உரிமைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
GenZ 212 என்று அழைக்கப்படும் ஒரு இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டங்கள், காசாபிளாங்கா, ரபாத், மராகேஷ் மற்றும் அகாதிர் உள்ளிட்ட 11 நகரங்களில் இடம்பெற்று வருகிறது.
பல பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் நிதி பற்றாக்குறையால் மோசமான நிலையில் உள்ளன ஆனால் 2030 உலகக் கோப்பைக்கான தயாரிப்புக்காக பில்லியன் கணக்கான முதலீடுகள் இடம்பெறுவதாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நாடு முழுவதும் கட்டுமானம் அல்லது புதுப்பித்தலில் உள்ள புதிய மைதானங்களை சுட்டிக்காட்டி, “இங்கே மைதானங்கள் உள்ளன, ஆனால் மருத்துவமனைகள் எங்கே?” என்று கோஷமிட்டுள்ளனர்.





