மலேசியா : கிளந்தான் இடைத்தேர்தலில் ஆளும் கூட்டணி வெற்றி
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் ஆளும் கூட்டணியில் உள்ள கட்சி, சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) நடந்த கிளந்தான் இடைத்தேர்தலில் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியிடமிருந்து தொகுதியைக் கைப்பற்றியது.மலாய் வாக்காளர்களின் ஆதரவை வெல்லத் தடுமாறிய பிரதமர் அன்வாருக்கு இது உந்துதலாகக் கருதப்படுகிறது.
பெரிக்கத்தான் நேஷனலின் கோட்டையான கிளந்தானின் நெங்கிரி தொகுதி 2003ல் உருவாக்கப்பட்டதிலிருந்து அது அம்னோ கைவசம் இருந்து வந்தது. ஆனால், 2023 ஆகஸ்ட்டில் நடந்த மாநிலத் தேர்தலில் 810 வாக்குகள் வித்தியாசத்தில் அது தோல்வியுற்றது.
தேசிய முன்னணிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அம்னோ, பிரதமர் அன்வாரின் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் உள்ள கட்சிகளில் ஒன்று.இந்த முறை அம்னோ 3,352 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது. தேர்தல் ஆணையத்தின்படி, அக்கட்சி வேட்பாளர் முகம்மது அஸ்மாவி ஃபிக்ரி அப்துல் கனி, 9,091 வாக்குகள் பெற்றார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பெரிக்கத்தான் நேஷனலின் கூட்டணிக் கட்சியான பெர்சத்து வேட்பாளர் முகம்மது ரிஸ்வாடி இஸ்மாயில், 5,739 வாக்குகள் பெற்றார்.
மலேசியாவில் இடைத்தேர்தல் பெரும்பாலும் அரசாங்கம் அல்லது எதிர்க்கட்சியின் செல்வாக்கை விரைவாக கோடிகாட்டும் அளவீடுகளாகக் கருதப்படுகிறது.
இவ்வாண்டு நெங்கிரி தொகுதியில் 20,259 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 85.9 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள், 0.2 விழுக்காட்டினர் சீனர்கள், 13.8 விழுக்காட்டினர் இதர இனத்தவர்கள்.