தனிமை வரமா? சாபமா? : ஒவ்வொரு மணிநேரமும் 100 பேர் உயிரிழப்பு!
தனிமையின் காரணமாக பக்கவாதம், இதய நோய், நீரிழிவு நோய், அறிவாற்றல் பிரச்சினைகள் போன்றவற்றின் அபாயம் அதிகரிப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் அகால மரணங்கள் கூட ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பின் சமூக உறவுகள் ஆணையம் அதன் உலகளாவிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அறிக்கையின்படி, ஆண்டுதோறும் உலகளவில் 871,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் தனிமையால் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சராசரியாக, தனிமை காரணமாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 100 இறப்புகள் நிகழ்கின்றன. தனிமையால் தீவிரமாக பாதிக்கப்படுபவர்கள் சராசரி நபரை விட இரண்டு மடங்கு அதிகமாக மனச்சோர்வடைவதாகவும், அவர்கள் தற்கொலை எண்ணங்களுக்கு கூட தள்ளப்படலாம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் ஒவ்வொரு 6 பேரில் ஒருவர் தனிமையால் பாதிக்கப்படுவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது, இது அவர்களின் உடல்நலம், பொருளாதார நிலை, கல்வி மற்றும் பொது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.





