காசாவில் 20,000 அமைதி காக்கும் படையினரை நிலைநிறுத்த இந்தோனேசியா தயார்: ஐ.நா-வில் ஜனாதிபதி பிரபோவோ

அமைதிப் பணிக்காக குறைந்தது 20,000 வீரர்களை காஸாவிற்கு அனுப்பத் தயாராக இருப்பதாக இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பொதுச் சபையில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) உரையாற்றிய பிரபோவோ, உலகில் ஆக அதிக முஸ்லிம் மக்கள்தொகையைக் கொண்டுள்ள இந்தோனீசியா, ‘வலிமையால் சரியானதைச் செய்ய முடியாது’ என்பதைக் காட்டும் வகையிலான அமைதியை விரும்புவதாகக் கூறினார்.
“ஐநாமீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. அமைதிக்குக் காப்பாளர்கள் தேவைப்படும் இடத்தில் சேவையாற்றுவதைத் தொடர்வோம்,” என்று அவர் சொன்னார்.
“ஐநா பாதுகாப்பு மன்றமும் பொதுச் சபையும் முடிவுசெய்தால், காஸாவில் அமைதிப் பணிக்காக 20,000 அல்லது அதற்கு மேற்பட்ட இந்தோனீசியர்களை அனுப்பத் தயாராக இருக்கிறோம்,” என்றார் பிரபோவோ.
அத்துடன், உக்ரேன், சூடான், லிபியா என எங்கு வேண்டுமானாலும் அமைதிப் பாதுகாவலர்களை அனுப்பவும் இந்தோனீசியா தயார் என்றும் அவர் தெரிவித்தார்.
காஸாவில் கடந்த ஈராண்டுகளாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே சண்டை நீடித்துவரும் நிலையில், காஸாவிற்கான போருக்குப் பிந்திய திட்டம் தொடர்பில் அமெரிக்காவும் அரபு நாடுகளும் பல மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும் இன்னும் முடிவு எட்டப்படவில்லை.