H5N1 வைரஸ் உலகளாவிய சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் ; விஞ்ஞானிகள் எச்சரிக்கை
பறவைகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் H5N1 வைரஸ், எதிர்காலத்தில் ஒரு பாரிய உலகளாவிய சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சுமார் 48 சதவீத இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ள இந்த வைரஸ் குறித்து, Ashoka பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அண்மையில் புதிய ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டக் கிராமங்களை மாதிரியாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த கணினி உருவகப்படுத்துதல் ஆய்வில், அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, ஒரு பகுதியில் தொற்று எண்ணிக்கை 2 முதல் 10-க்குள் இருக்கும்போதே பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தினால் மட்டுமே பரவலைத் தடுக்க முடியும். எண்ணிக்கை 10-ஐத் தாண்டிவிட்டால், அது சமூகப் பரவலாக மாறி அதிகாரிகளின் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பறவைகளை அழித்தல் மற்றும் ஆரம்பக்காலத் தடுப்பூசிகள் ஓரளவுக்கு உதவினாலும், மனிதனுக்கு மனிதன் பரவத் தொடங்கும் தருணத்தில் ‘நேரம்’ மிக முக்கியமானது.
நாம் ஓரளவுக்குத் தயாராக இருந்தாலும், வைரஸில் ஏற்படும் மரபணு மாற்றங்கள் பெரும் குழப்பங்களை விளைவிக்கக்கூடும் என்பதால், சுகாதாரத் துறை மிகுந்த கண்காணிப்புடன் செயல்பட வேண்டுமென விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.





