இந்தியா – ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் முன்னிலையில், இந்தியா – ஓமன் இடையே ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று ஓமன் சென்றிருந்தார்.
இந்நிலையில், இன்று இரு தலைவர்கள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இதன்மூலம், ஓமனுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களில் 98.08% பொருட்களுக்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
அதேபோன்று, இந்தியாவுக்கு ஒமன் ஏற்றுமதி செய்யும் பொருட்களில் 77.79% பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அவர் தனது எகஸ் தளத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
‘‘ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் உடன் ஒரு சிறப்பான கலந்துரையாடலை மேற்கொண்டேன். ஓமனை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும் அவரது தொலைநோக்குப் பார்வையைப் பாராட்டினேன்.
இந்தியாவும் ஓமனும் சிறப்புமிக்க ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை உறுதி செய்த அவரது முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தேன். இது இருதரப்பு ஒத்துழைப்பில் ஒரு புதிய மற்றும் பொன்னான அத்தியாயமாகும்.
இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து நான் சுல்தானுடன் கலந்துரையாடினேன்.
எரிசக்தி, முக்கிய கனிமங்கள், விவசாயம், உரங்கள், சுகாதார பாதுகாப்பு போன்ற துறைகளில் நெருங்கிய உறவுகளுக்கு அதிக அளவில் சாத்தியக் கூறுகள் உள்ளது குறித்து நாங்கள் கலந்துரையாடினோம்
கலாச்சாரம் மற்றும் மக்கள் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்தும் நாங்கள் விவாதித்தோம். குறிப்பாக மாணவர் பரிமாற்றத் திட்டங்கள் இதில் அடங்கும்’’ என குறிப்பிட்டுள்ளார்.





