இந்தியா – பாதயாத்திரையின் போது கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீசி தாக்குதல்

டெல்லியில் பாதயாத்திரை மேற்கொண்டு இருந்த முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
டெல்லியின் தென்பகுதியில் உள்ள மால்வியா நகரில் சனிக்கிழமை (நவம்பர் 30) பிற்பகல் அச்சம்பவம் நிகழ்ந்தது.
பாதயாத்திரையில் ஊடுருவிய மர்ம நபர் ஒருவர், திரவம் ஒன்றை கெஜ்ரிவால் மீது வீசியதாகவும் அந்த நபரை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பிடித்துவிட்டதாகவும் காவல்துறை கூறியது.
என்ன திரவம் என்றும் அவர் எதற்காகத் தாக்குதல் நடத்தினார் என்பதும் விசாரிக்கப்பட்டு வருவதாக அது தெரிவித்தது.
சம்பவம் நிகழ்ந்ததும் கெஜ்ரிவால் தமது முகத்தைத் துடைப்பது காணொளியில் இடம்பெற்றது. திரவம் வீசப்பட்டதால் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டதா என்பது பற்றி உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை.
அந்தச் சம்பவத்தை விமர்சித்த ஆம் ஆத்மி, “நாட்டின் தலைநகரில் முன்னாள் முதல்வருக்கே பாதுகாப்பு இல்லாவிட்டால், சாதாரண மனிதனின் கதி என்ன,” என்று வினவியது.
டெல்லி காவல்துறை மத்திய உள்துறை அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது