UKவில் அதிகரிக்கும் பெண் துஷ்பிரயோக சம்பவங்கள் – புதிய திட்டங்கள் அறிவிப்பு!
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதை அடுத்து பிரித்தானிய உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) இன்று சில முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளார்.
இதற்கமைய 2029 ஆம் ஆண்டிற்குள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள ஒவ்வொரு காவல் படையிலும் சிறப்பு கற்பழிப்பு மற்றும் பாலியல் குற்ற விசாரணை குழுக்களை அமைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு தசாப்தத்திற்குள் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை பாதியாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டங்கள் வரும் வியாழக்கிழமை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சண்டே வித் லாரா (Sunday with Laura) என்ற நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், புதிய குழுக்களில் பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் குற்ற வழக்குகளில் பணியாற்றுவதற்கான சிறப்பு புலனாய்வு திறன் கொண்ட அதிகாரிகள் இருப்பார்கள் என்றும், துஷ்பிரயோகம் செய்பவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள ஊழியர்களுக்கு சரியான பயிற்சியளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
50% இற்கும் மேற்பட்ட காவல் படைகள் ஏற்கனவே உள்ளதாக குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு படையிலும் 2029 க்குள் அர்ப்பணிப்புள்ள அதிகாரிகள் இருப்பார்கள் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் சிறுமிகளை இணையத்தின் மூலம் துன்புறுத்துபவர்களை குறிவைக்க, சிறப்பு இரகசிய காவல் அதிகாரிகளின் பிரிவுகளுக்கு கிட்டத்தட்ட £2 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் பின்தொடர்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல் போன்ற குற்றங்களைச் சேர்க்க கிளேரின் சட்டத்தை விரிவுபடுத்துவதையும் அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





