வீட்டுத் தோட்டம்: மன அழுத்தத்தைக் குறைக்கும் ‘இயற்கை தெரபி’ – புதிய ஆய்வில் தகவல்!
இன்றைய இயந்திரமயமான உலகில், மனிதர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் மன அழுத்தம் (Stress). இதைக் குறைக்க விலை உயர்ந்த சிகிச்சைகளை விட, நம் வீட்டில் ஒரு சிறிய பகுதியில் நாம் அமைக்கும் வீட்டுத் தோட்டம் (Home Garden) மிகச்சிறந்த மருந்தாகச் செயல்படுவதாகப் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய (2025) மருத்துவ ஆய்வுகளின்படி, வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தோட்ட வேலைகளில் ஈடுபடுபவர்களின் மனநிலை, மற்றவர்களை விட 6.6% அதிக மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, மண்ணைத் தொட்டு வேலை செய்வது உடலில் செரோடோனின் (Serotonin) எனப்படும் ‘மகிழ்ச்சி ஹோர்மோனை’ இயற்கையாகவே சுரக்கச் செய்கிறது.
வீட்டுத் தோட்டத்தால் கிடைக்கும் 5 முக்கிய நன்மைகளை இங்கே பார்க்கலாம்.
1 ) மன அழுத்தத்திற்கு காரணமான ‘கார்டிசோல்’ (Cortisol) ஹோர்மோனின் அளவை செடிகளின் பச்சை நிறமும், அவற்றைப் பராமரிக்கும் செயலும் 20% வரை குறைக்கின்றன.
2 ) செடிகளுக்கு நீர் ஊற்றுவது, களை எடுப்பது போன்ற செயல்கள் ஒருவிதமான தியான நிலையை (Mindfulness) உருவாக்குகின்றன. இது தேவையற்ற கவலைகளை மறந்து அந்தத் தருணத்தில் அவர்களை புது உலகிற்கு அழைத்துச்செல்கிறது.
3 ) ஒரு சிறிய விதை முளைத்து செடியாக வளர்ந்து, அதில் பூக்கள் பூப்பதைப் பார்க்கும் போது, ஒரு செயலைச் செய்து முடித்த திருப்தியும், தன்னம்பிக்கையும் (Self-esteem) உண்டாகிறது.
4 ) குனிந்து நிமிர்ந்து செடிகளைப் பராமரிப்பது ஒரு மிதமான உடற்பயிற்சிக்குச் சமம். இது உடல் தசைகளை வலிமையாக்குவதோடு, இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
5 ) வீட்டுத் தோட்டத்தில் மல்லிகை, லாவண்டர் போன்ற நறுமணச் செடிகளை வளர்ப்பது, இரவில் அமைதியான மற்றும் ஆழ்ந்த உறக்கத்தைப் பெற உதவுகிறது.
மேலும் உங்களிடம் பெரிய இடம் இல்லையென்றால், ஜன்னல் ஓரங்களில் சிறிய தொட்டிகளிலோ அல்லது ‘வெர்டிகல் கார்டன்’ (Vertical Garden) முறையிலோ செடிகளை வளர்க்கலாம்.
ஆரம்பத்தில் கற்றாழை (Aloe Vera), மணி பிளாண்ட் (Money Plant), அல்லது துளசி போன்ற குறைந்த பராமரிப்பு தேவைப்படும் செடிகளில் இருந்து தொடங்குங்கள்.
தினமும் காலை அல்லது மாலை வேலையில் வெறும் 15 நிமிடம் உங்கள் செடிகளுடன் செலவிடுங்கள். இது உங்களை நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.





