ஹமாஸ் முன்னாள் தலைவரின் மனைவி காசாவை விட்டு தப்பியதாக தகவல் – மறுமணமும் முடிந்தது

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வந்த ஹமாஸ் இயக்கத்தின் முன்னாள் தலைவரான யாஹ்யா சின்வர், 2011 ஆம் ஆண்டு சமர் முகமது அபு ஜாமா என்பவரை திருமணம் செய்தார். ஆனால், கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் யாஹ்யா சின்வர் உயிரிழந்தார்.
இந்த தாக்குதலுக்கு முன்பே அவரது மனைவி சமர், தனது குழந்தைகளுடன் வேறு ஒருவரின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி ரபா எல்லை வழியாக எகிப்துக்கு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் துருக்கிக்கு சென்ற அவர், அங்கேயே மீண்டும் திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக, பலசேனல் முயற்சிகள், உயர் அதிகாரிகளின் உதவி மற்றும் அதிகளவிலான பணம் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சின்வரின் மரணத்துக்குப் பிறகு ஹமாஸ் தலைவராக பொறுப்பேற்றவர் அவரது சகோதரர் முகமது சின்வர். ஆனால், குறுகிய காலத்திலேயே அவரும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். தற்போது, முகமது சின்வரின் மனைவி நஜ்வாவும் ரபா எல்லை வழியாக காசாவை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர் தற்போது எங்கு உள்ளார் என்பது தெரியவில்லை.
இந்த இரு பெண்களும் தங்களுடைய கணவர்களின் மரணத்திற்கு முன்பே காசாவை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுவது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், காசாவை நோக்கி இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்கள் 21 மாதங்களாக தொடர்ந்துவந்துள்ளன. இதுவரை 59,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர் என காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.