விக்கிபீடியாவுக்கு மாற்றாக க்ரோகிபீடியா – எலான் மஸ்க் போடும் புதிய திட்டம்
உலகின் முன்னணி தொழில்நுட்பவியலாளரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் விக்கிபீடியாவுக்கு மாற்றாக புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
தனது xAI நிறுவனத்தின் மூலம் க்ரோகிபீடியா (Grokipedia) எனும் புதிய ஏ.ஐ. அடிப்படையிலான இணைய கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதாக அறிவித்துள்ளார்.
மிக விரைவில் அறிமுகமாகவுள்ள இந்த தளம், தற்போது உள்ள விக்கிபீடியாவுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது, விக்கிபீடியாவைவிட மிகப்பெரிய வளர்ச்சியுடையதாக இருக்கும் என மஸ்க் தனது X கணக்கில் பதிவிட்டுள்ளார்.
க்ரோகிபீடியா, xAI நிறுவனத்தின் Grok எனும் ஏ.ஐ. மூலம் இயக்கப்படும். பிரபஞ்சத்தை புரிந்துகொள்ள xAI எடுத்திருக்கும் முக்கியமான முயற்சிகளில் இதுவும் ஒன்று என மஸ்க் தெரிவித்துள்ளார்.
விக்கிபீடியாவை தொடர்ந்து விமர்சித்து வரும் மஸ்க், அதை இடதுசாரி சித்தாந்த சார்புடன் செயல்படுவதாகவும், Wokipedia, Dickipedia எனக் கேலி பெயர்களால் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், க்ரோக் AI கடந்த காலத்தில் சில சர்ச்சைகள் உருவாக்கியுள்ள போதும், க்ரோகிபீடியா திட்டம் xAI நிறுவனத்தின் முக்கிய முயற்சியாக உருவாகிறது.





