Chrome-ல் பாதுகாப்பை அதிகப்படுத்தும் கூகுள்.!
கூகுள் நிறுவனம் (Google) அதன் தயாரிப்புகளில் ஒன்றான குரோம் பிரௌசரில் (Chrome) ‘டிராக்கிங் ப்ரொடெக்ஷன்’ (Tracking Protection) என்கிற பாதுகாப்பு அம்சத்தை சோதிக்க உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 4ம் தேதி முதல் சோதனை செய்யப்படவுள்ள இந்த அம்சம் முதலில் உலகளவில் ஒரு சதவீத குரோம் பயனர்களுக்கு கிடைக்கும்.
இந்த டிராக்கிங் ப்ரொடெக்ஷன் அம்சம் என்பது மூன்றாம் தரப்பு குக்கீகளை (Third-party cookies) முடக்குவதற்கான கூகுள் முயற்சியின் ஒரு பகுதியாகும். மூன்றாம் தரப்பு குக்கீகள் என்பது உங்கள் மொபைல், லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் நீங்கள் பார்வையிடும் இணையதளத்தைத் தவிர, வேறு ஒரு இணையதளத்தின் மூலம் வைக்கப்படும் குக்கீ ஆகும்.
பொதுவாக குக்கீகள் என்பது நீங்கள் ஒரு இணையதளத்தில் லாகின் செய்த தகவல் மற்றும் அதில் நீங்கள் பார்ப்பதை அந்த இணையதளம் நினைவில் வைத்துக் கொள்ள உதவுகிறது. இதனால் நீங்கள் மீண்டும் அந்த இணையதளத்தை பார்வையிட எளிதாக இருக்கும். ஆனால் மூன்றாம் தரப்பு குக்கீகள் ஆன்லைன் விளம்பரத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த குக்கீகள் உங்களின் ஹிஸ்டரி மற்றும் நீங்கள் என்னவெல்லாம் பார்க்கிறீர்கள் என்பதை கண்காணித்து, அது சம்பந்தமான விளம்பரங்களை உங்களுக்குக் காட்டும். இந்த குக்கீகளை அகற்றுவதற்கு டிராக்கிங் ப்ரொடெக்ஷன் அம்சம் அறிமுகமாகவுள்ளது. மூன்றாம் தரப்பு குக்கீகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம், மற்ற இணையத்தளங்களின் கண்காணிப்பை கட்டுப்படுத்துகிறது.
2023 ஆம் ஆண்டில் அதிகமான பயனர்களுக்கு கடிராக்கிங் ப்ரொடெக்ஷனைப் படிப்படியாக விரிவுபடுத்த கூகுள் திட்டமிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் உலகில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் மூன்றாம் தரப்பு குக்கீகளின் பயன்பாட்டை முழுமையாக அகற்றுவதை கூகுள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த குக்கீகளை முடக்கிய பிறகு, குக்கீகள் இல்லாமல் இணையதளம் வேலை செய்யவில்லை என்றால், குறிப்பிட்ட தளங்களில் குக்கீகளை மீண்டும் இயக்குவதற்கான வசதி இருக்கும். பயனர்கள் தேவைப்பட்டால் குறிப்பிட்ட இணையதளங்களுக்கான குக்கீகளை இயக்கிக் கொள்ளலாம். இதை சோதனை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்கள் தங்கள் சாதனங்களில் குரோமைத் திறக்கும்போது இதற்கான அறிவிப்பைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.