ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க முடியாது – நீதிமன்றம் உத்தரவு
மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபண்டிகே இந்த தீர்ப்பை வழங்கினார்.
தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரருக்கு பிணை வழங்குவதற்கான குறிப்பிட்ட உண்மைகள் எதுவும் இல்லாத காரணத்தினால் பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தீர்ப்பை அறிவித்த நீதிபதி தெரிவித்தார்.
ஞானசார தேரர் தமக்கு விதிக்கப்பட்டுள்ள நான்கு வருட சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ள நிலையில், மேன்முறையீட்டு மனு விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பு வெளியாகும் வரை தம்மை பிணையில் விடுவிக்குமாறு தனது சட்டத்தரணிகள் ஊடாக கொழும்பு மேல் நீதிமன்றில் கோரிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
குறித்த கோரிக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ஞானசார தேரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்தார்.
இதன்படி இந்த விடயங்களை விசேட விடயங்களாக கருதி அவரை பிணையில் விடுவிக்குமாறு ஜனாதிபதியின் சட்டத்தரணி மைத்திரி குணரத்ன நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
அதன் பின்னர் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்த அரச சட்டத்தரணி, மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தற்போது அதிகளவான நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேன்முறையீட்டு மனுக்களின் விசாரணைகள் வினைத்திறனாக இடம்பெற்றுள்ளதாகவும் அதனால் மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணைகளில் தாமதம் ஏற்படுவதாக பாதுகாப்பு தரப்பினால் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பிணை வழங்குவதில் விசேட உண்மைகளாக கருத முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், ஞானசார தேரருக்கு உடல்நலக்குறைவு இருப்பதாக பிரதிவாதி சட்டத்தரணி தெரிவித்த போதிலும், அவருக்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற முடியாத நிலையில் உள்ளதா என்பதை பிரதிவாதி சட்டத்தரணி விளக்கவில்லை.
எனவே இந்த உண்மைகளை விசேட உண்மைகளாக ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்க சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இருதரப்பும் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, பின்னர் தனது முடிவை அறிவித்தார்.