பொருளாதார மீட்சிக்கு முழு ஆதரவு: அநுரவிடம் சீன தூதுக்குழு உறுதி!
இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு சீன அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன தேசிய மக்கள் காங்கிரஸ்ன் உப தலைவர் வாங் டோங்மிங் உள்ளிட்ட சீனத் தூதுக்குழுவின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இன்று பேச்சு நடத்தினர்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே மேற்படி உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
“டித்வா சூறாவளியால் ஏற்பட்டுள்ள சவால்களைத் தோற்கடித்து இலங்கை மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை மிக விரைவில் மீண்டெழும்.” என்று சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை எதிர்கொண்ட மிக மோசமான பேரழிவு குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்த உப தலைவர் , பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்க சீன அரசாங்கம் துரித நடவடிக்கை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கைக்கும், சீனாவிற்கும் இடையிலான நீண்டகால பொருளாதார, கலாச்சார மற்றும் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதே தமது விஜயத்தின் நோக்கம் எனவும் டோங்மிங் கூறினார்.





