நம்பிக்கை வாக்கெடுப்பின் தோல்வியால் ராஜினாமா செய்த பிராங்காய்ஸ் : ஆழமடைந்துள்ள மக்ரோனின் பிரச்சனைகள்

பிரான்ஸ் நாட்டின் அதிபராக உள்ள இமானுவேல் மேக்ரான், கடந்த வருடம் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த உத்தரவிட்டார். அதன்படி தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தில், முதலில் கேப்ரியல் அட்டல் பிரதமராக பதவி வகித்தார். அவர் கடந்த செப்டம்பரில் ராஜினாமா செய்த நிலையில், அதன் பிறகு மைக்கேல் பார்னியர் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
மைக்கேல் பார்னியர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்த நிலையில், மூன்றாவதாக பிராங்காய்ஸ் பாய்ரு என்பவர் பிரதமராக பதவியேற்றார். பிரான்ஸ் அரசுக் சுமார் 3 ட்ரில்லியன் யூரோக்கள் அளவுக்கு கடன் உள்ளது. அரசை கடனில் இருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு திட்டமிட்டு வந்தார். அரசின் செலவுகளை சிக்கனமாக மேற்கொள்வது அவசியம் என்ற தன் நிலைப்பாட்டுக்கு ஆதரவு கோரி, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிராங்காய்ஸ் பாய்ரு அழைப்பு விடுத்தார். அதைத்தொடர்ந்து வாக்கெடுப்பு நடந்தது.
மொத்தமுள்ள 573 உறுப்பினர்களில் 364 உறுப்பினர்கள் அவருக்கு எதிராக வாக்களித்துள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு எதிராக பெரும்பான்மை எம்.பி.க்கள் வாக்களித்ததால், பிரதமர் பதவியை பிராங்காய்ஸ் பாய்ரு தற்போது ராஜினாமா செய்துள்ளார். இதுவரை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் ஆட்சியில் 4 முறை பிரதமர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இப்போது புதிய பிரதமரை கண்டறிந்து பதவியேற்கச் செய்ய வேண்டிய நெருக்கடி அதிபர் மேக்ரோனுக்கு ஏற்பட்டுள்ளது.