தென்கொரிய மின்கலன் ஆலையில் தீ: ஒருவர் பலி, 21பேரை காணவில்லை
தென்கொரியாவில் உள்ள மின்கலன் ஆலை ஒன்றில் பெரிய அளவில் தீ மூண்டதைத் தொடர்ந்து ஒருவர் இறந்ததஉ உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திங்கட்கிழமையன்று (ஜூன் 24) நிகழ்ந்த இச்சம்பவத்தில் 21 பேரைக் காணவில்லை. தீ இன்னமும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
தீ மூண்ட லித்தியம் மின்கலன் ஆலை, அரிசெல் நிறுவனத்துக்குச் சொந்தமானது. அரிசெல், தென்கொரியாவின் முக்கிய மின்கலன் உற்பத்தி நிறுவனமாகும்.
ஆலை, தலைநகர் சியோலுக்கு கு தெற்கே இருக்கும் ஹுவாசியோங் நகரில் அமைந்துள்ளது.
ஆலைக்குள் நுழைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை எழுந்துந்துள்ளதாக கிம் ஜின்-யங் எனும் தீயணைப்பாளர் ஊடகங்களிடம் தெரிவித்தார். தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தவுடன் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
“தற்போதைக்கு 21 ஊழியர்களைக் காணவில்லை. நிறுவனத்திடமிருந்து அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களின் தகவல்களைப் பெற்று அவர்கள் எங்கு இருக்கக்கூடும் என்பதை அறிய முயற்சி செய்யவிருக்கிறோம்,” என்று கிம் குறிப்பிட்டார். ஒருவர் இறந்தாகவும் மற்றொருவர் மோசமான தீக்காயங்களுக்கு ஆளானதாகவும் அவர் சொன்னார்.
உடனடியாகக் காணாமற்போனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கவும் மக்களை மீட்கவும் எல்லா மீட்புப் பணியாளர்களையும் சம்பந்தப்பட்ட பொருள்களையும் ஒன்றுசேர்த்து பணியில் இறங்குமாறு தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.