எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் : இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தது ஐக்கிய மக்கள் சக்தி!
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீட்டை கோரி ஐக்கிய மக்கள் சக்தி வழக்கு தாக்கல் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான இரண்டாம் நாள் விவகாதம் நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற நிலையில் இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், ‘எக்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய நாம் சட்டரீதியான நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம்.
அந்தவகையில் கப்பல் நிறுவனத்திற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அதற்கமைய குறித்த கப்பல் நிறுவனங்களுக்கு எதிராக கோரிக்கை கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.
நம் நாட்டிலுள்ள சில தரப்பினரை பணத்திற்கு விலைக்கு வாங்க முடியும் என்று இந்த கப்பல் நிறுவனங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றன. பணம் கொடுத்து விலைக்கு வாங்க கூடியவர்கள் எவரும் நம் நாட்டில் இல்லை.நாம் நாட்டை நேசிக்கும் ஒருவரும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்திற்காக நாட்டை காட்டிக்கொடுக்க மாட்டார்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் குறித்த கப்பல் நிறுவனத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளானது குறித்த சம்பவத்திற்கான இழப்பீடு தொகையான 6.4 பில்லியன் நிதியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் எடுக்கும் முயற்சிக்கு மிகுந்த பலமாக இருக்கும் என நான் நம்புகின்றேன்.
பணம் கொடுத்து வாங்க கூடியவர்கள் நம் தாய்நாட்டில் யாரும் இல்லை என்பதை குறித்த கப்பல் நிறுவனங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.