சர்ச்சையில் பென் டக்கட்: மதுபோதையில் தள்ளாடும் வீடியோ வைரல்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஆஷஸ் (Ashes) தொடருக்கு இடையே, இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கட் (Ben Duckett) மதுபோதையில் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘X’ தளத்தில் வேகமாகப் பரவி வரும் அந்த வீடியோவில், பென் டக்கட் தனியாகத் தள்ளாடியபடி இருப்பதைக் காண முடிகிறது. அப்போது அங்கிருந்த ரசிகர்கள் சிலர், அவர் பாதுகாப்பாக அறைக்குத் திரும்ப ஏதேனும் உதவி வேண்டுமா என்று கேட்கின்றனர்.
அந்த உரையாடலின் போது, இங்கிலாந்து ரசிகர் ஒருவர், “நாம் ஏற்கனவே தொடரில் 2-0 என பின்தங்கியுள்ளோம்” என்று குறிப்பிடுகிறார்.
இந்த வீடியோ இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக டக்கட் அந்த ரசிகரை வசைபாடியதாகவும், “நான் யார் என்று உனக்குத் தெரியுமா?” எனக் கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஆஷஸ் தொடரில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து வரும் இங்கிலாந்து அணிக்கு, வீரர்களின் இத்தகைய ஒழுக்கமற்றச் செயல்கள் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.





