தமிழ் தேசிய கூட்டமைப்பை கைப்பற்ற ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி முயற்சி – தேர்தல் ஆணைக்குழு மறுப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பை கைப்பற்ற ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி எடுத்த முயற்சிக்கு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு மறுப்புத் தெரிவித்து விட்டது.
ஆர்.ராகவனை செயலாளராக் கொண்டு பதிவு செய்யப்பட்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெயரில் உள்ள ஜனநாயகத்தை நீக்கி தமிழ்த் தேசியக் கூட்டணி என மட்டும் செயல்படவும் அதனை ஆங்கிலத்தில் T.N.A என உச்சரிக்கவும் தேர்தல்கள் ஆணைக் குழுவிற்கு எழுத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பத்தை 2023 மே மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக் குழுவின் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
இதே பெயரில் வேறு கட்சி நீண்ட காலமாக இயங்குவதனால் இந்த சொல்லாடல் இடம்பெறும் வகையிலான பெயரிற்கு அனுமதிக்க முடியாது என தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்து குறித்த கட்சிக்கு தற்போது எழுத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
ஜனாநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் தற்போது 5 கட்சிகள் கூட்டாக இயங்குவதோடு 5 கட்சிகளின் தலைவர்களும் இணைத் தலைவர்களாக இயங்கும் நிலையில் ரி.என்.ஏ ஆரம்பிக்கும்போது இருந்த 5 கட்சிகளில் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் இரு கட்சிகளும் இந்த கூட்டணியில் இருப்பதனால் அந்தப் பெயர் தமக்கே சொந்தம் என கூறிவந்த நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு அதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டது.
இதேநேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என அனைவரும் இணங்கி தமிழ் அரசுக் கட்சியின் பெயரில் பயன்படுத்தவே ஒப்புதல் வழங்கியதனால் அந்தக் கட்சியின் சின்னத்திற்கே இப் பெயரை பயன்படுத்த முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு பதிலளித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழ் அரசுக் கட்சி வெளியேறி விட்டதாக ரெலோவும், புளொட்டும் அறிவித்து தம்முடன் ஈ.பி.ஆர்எல்.எவ், தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றையும் இணைத்துக்கொண்டு தாமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என கூறினர்.
இதற்கமையே இக் கட்சியினால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என பயன்படுத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.